கேரளாவில் சபரிமலை பக்தர்கள் கார்- பஸ் மோதி விபத்து: 2 பேர் பலி
- விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
- எதிர்பாராதவிதமாக காரும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சபரிமலைக்கு தினமும் ஏராளமானோர் பஸ், வேன் மற்றும் கார்களில் வந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
நேற்று மகாராஷ்டிரா மாநிலம் பதிவு எண் கொண்ட ஒரு காரில் சிலர் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 11.30 மணி அளவில் கொல்லம் அருகே உள்ள சடையமங்கலம் நெட்டேதாரா பகுதியில் கார் வந்தது.
அப்போது எதிரே சுற்றுலா பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக காரும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் வந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர்.
இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும் காருக்குள்ளேயே 2 பேர் பிணமாகி விட்டனர். மேலும் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பலியான 2 பேரும் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த சரவணன் மற்றும் சண்முகராஜா என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் தவறான திசையில் சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.