அசாமில் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென புகுந்த வெள்ளம்: 15-க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக அச்சம்
- திடீரென வெள்ளம் புகுந்ததால் தொழிலாளர்களால் தப்பிக்க முடியவில்லை.
- மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அசாம் மாநிலம் திமா ஹசாயோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெள்ளம் புகுந்ததால் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் திமா ஹசாயோ மாவட்த்தில் உள்ள உம்ராங்சோவில் உள்ள 3 கிலோ பகுதியில் உள்ள அசாம் நிலக்ககரி குவாரியில் நடந்துள்ளது.
இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் "நிலக்கரிச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள உம்ராங்ஷுவிலிருந்து துயரமான செய்தி வந்துள்ளது. சரியான எண்ணிக்கை மற்றும் நிலை இன்னும் தெரியவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் எனது சக ஊழியர் கௌசிக் ராய் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அனைவரின் பாதுகாப்பிற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மீட்புப் பணிக்காக ராணுவ உதவி கேட்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமா ஹசாயோ எஸ்.பி. மயங்க் ஜா "சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். திடீரென வெள்ளம் வந்ததால் தொழிலாளர்கள் உடனடியாக சுரங்கத்தில் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்படடது என நேரில் சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.