பிரியங்கா காந்தியின் கன்னத்தை போல் சாலை.. வாயை விட்ட பாஜக வேட்பாளர் வீட்டின் முன் காங்கிரஸ் போராட்டம்
- சங்கிகளை அங்கீகரிப்பது மகள்களை அவமானப்படுத்துவது' என எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
- டெல்லி முதல்வர் அதிஷி தனது அப்பாவையே மாற்றியவர் என்று ரமேஷ் பிதுரி மற்றொரு சர்ச்சை கருத்தை தெரிவித்தார்
டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக- ஆம் ஆத்மி காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
கல்காஜி தொகுதியில் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி போட்டியிட உள்ளார். இவர் இதற்கு முன்னர் 3 முறை எம்எல்ஏ-வாகவும், 2 முறை எம்பியாகவும் இருந்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூட்டோடு சூடாக பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி, தனக்கு வாக்களித்தால், பிரியங்கா காந்தியின் கன்னங்களை போன்ற சாலைகளை அமைப்பேன் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார்.
இந்த கருத்துக்கு காங்கிரஸ் தரப்பிலும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது. இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று [திங்கள்கிழமை] சவுத் அவென்யூவில் உள்ள ரமேஷ் பிதுரி இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது, வீட்டின் பெயர் பலகையில் கருப்பு பெயிண்ட் ஊற்றினர். கதவு மீது செருப்பை வீசி தாக்கியுள்ளனர். பெண்களுக்கு எதிரானவன் [மகிளா விரோதி] என வீட்டு வாசல் கதவில் கருப்பு பெயின்ட்டால் எழுதினர்.
டெல்லி இளைஞர் தலைவர் அக்ஷய் லக்ரா தலைமையில் நடந்த இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
பிதுரிக்கு எதிரான முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். 'shame on ரமேஷ் பிதுரி' மற்றும் 'சங்கிகளை அங்கீகரிப்பது மகள்களை அவமானப்படுத்துவது' என எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
பிரியங்கா காந்தி குறித்து பிதுரி கூறியிருப்பது மிகவும் வெட்கக்கேடானது, இந்த மலிவான சிந்தனைக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், பாஜக தலைவர் மன்னிப்பு கேட்கும் வரை இளைஞர் காங்கிரஸ் இதுபோல் போராட்டம் தொடரும் என்று லக்ரா கூறினார்.
இதற்கிடையே டெல்லி முதல்வர் அதிஷி தனது அப்பாவையே மாற்றியவர் என்று ரமேஷ் பிதுரி மற்றொரு சர்ச்சை கருத்தை தெரிவித்தார். இதை பற்றி பேசும்போது அதிஷி செய்தியாளர் சந்திப்பில் மனமுடைந்த அழுதார்.