இந்தியா
டெல்லி - பஞ்சாபில் குண்டுவெடிப்புக்கு திட்டம்: உளவுத்துறை தகவலால் பாதுகாப்பு அதிகரிப்பு
- நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.
- டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதுபோல முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் சுதந்திரத்தினத்துக்கு முன்பு அல்லது அடுத்த நாள் டெல்லியில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதை உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் பேசியதை இடைமறித்து கேட்ட உளவுத் துறையினர் இதுபற்றி மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். டெல்லி அல்லது பஞ்சாபில் நாசவேலைக்கு பயங்கரவாதிகள் முயற்சி செய்யக்கூடும் என்று உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.