விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு
- மக்கள் சக்தியை வலுப்படுத்த தொழில்நுட்பத்தின் சக்தியை தேர்தல் ஆணையம் பயன்படுத்தியுள்ளது.
- அனைவருக்கும் நாட்டு மக்கள் முன் கூட்டியே குடியரசு தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நாட்டு மக்களுக்கு வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார்.
இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 26-ந்தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, முன்னதாக இன்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். இது 118-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும். இதில் மோடி பேசியதாவது:-
அடுத்த ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம் கொண்டாடப்படுவதால் ஒரு வாரத்திற்கு முன்பு, மாதத்தின் 3-வது ஞாயிற்றுக்கிழமையில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுகிறேன். அனைவருக்கும் நாட்டு மக்கள் முன் கூட்டியே குடியரசு தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த குடியரசு தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது இந்திய குடியரசின் 75-வது ஆண்டு விழா ஆகும். இந்த ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. நமது புனிதமான அரசியலமைப்பை நமக்கு வழங்கிய அரசியலமைப்புச் சபையின் அனைத்து மகத்தான ஆளுமைகளுக்கும் நான் தலை வணங்குகிறேன்.
நமது வாக்களிப்பு செயல் முறையை அவ்வப்போது நவீனப்படுத்தி அதை வலுப்படுத்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் சக்தியை வலுப்படுத்த தொழில்நுட்பத்தின் சக்தியை தேர்தல் ஆணையம் பயன்படுத்தியுள்ளது. நியாயமான தேர்தல்கள் உறுதிப்பாட்டிற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்டுகிறேன்.
மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயக செயல்முறைகளில் பங்கேற்று வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கும்பமேளாவில் பல்வேறு சாதிகள், பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். எந்த வகையான பாகுபாடும் இல்லை. பக்தர்களின் பிரமாண்டமான ஒன்றுகூடலில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்று உள்ளனர்.
இளம் தலைமுறை பெருமையுடன் அதன் நாகரிகத்தில் இணையும்போது, அதன் வேர்கள் வலுவடைந்து, அதன் பொன்னான எதிர்காலம் உறுதி செய்யப்படுகிறது. இந்த முறை கும்பமேளாவில் பெரிய அளவில் டிஜிட்டல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் உலகளாவிய புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் தாவர விதையை விண்வெளிக்கு அனுப்பி அவற்றை முளைக்க வைத்து உள்ளனர். இது எதிர் காலத்தில் விண்வெளியில் காய்கறிகளை வளர்ப்பதற்கான பரிசோதனையாகும். இது நமது விஞ்ஞானிகள் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் வியத்தகு சாதனைகளை செய்து வருகின்றனர். விண்வெளி ஆராய்ச்சியில் எதிர்கால சவால்களுக்கு இந்திய விஞ்ஞானிகள் தீர்வுகளை வழங்குவார்கள். விண்வெளி துறையில் இந்தியா அபார வளர்ச்சி அடைந்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டியின் எக்ஸ்டெம் மையம் விண்வெளியில் உற்பத்தி செய்வதற்கான புதிய தொழில்நுட்பங்களில் பணியாற்றி வருகிறது. விண்வெளியில் 3டி அச்சிடப்பட்ட கட்டிடங்கள், உலோக நுரைகள் மற்றும் ஆப்டிகல் பைபர்கள் போன்ற தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி செய்து வருகிறது.
தண்ணீர் இல்லாமல் கான்கிரீட் உற்பத்தி செய்வது போன்ற புரட்சிகரமான முறைகளை உருவாக்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி இந்தியாவின் ககன்யான் திட்டத்தையும் எதிர்கால விண்வெளி நிலையங்களையும் வலுப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.