போதைக்கு அடிமையாகி 40 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
- ரவீந்திரகுமார் கூறிய தகவல்களை கேட்டு மிரண்டு போன போலீசார், அவரால் கடத்தி கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பட்டியலை திரட்டினர்.
- தகவல்களின் அடிப்படையில் ரவீந்திரகுமார் மீது டெல்லி கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார். இவரது குடும்பத்தினர் வேலை தேடி டெல்லிக்கு வந்தனர். டெல்லி புறநகர் பகுதியில் தங்கிய அவர்கள் அப்பகுதியில் கூலிவேலை செய்து வந்தனர்.
ரவீந்திரகுமார் வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாக ஊர் சுற்றிவந்தார். அப்போது போதைக்கு அடிமையானார். அதன்பின்பு ஆபாச படங்கள் பார்க்க தொடங்கினார். இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய தொடங்கினார்.
டெல்லி புறநகர் பகுதியில் கட்டிட வேலை நடைபெறும் பகுதிகளுக்கு சென்று நோட்டமிட்டு அங்கு தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து கடத்தி செல்வார். பின்னர் தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வார். தொடர்ந்து அவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பிணத்தை எங்காவது கண்காணாத இடத்தில் வீசிவிட்டு சென்றுவிடுவார்.
ஒரு குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பின்பு மீண்டும் அதே இடத்திற்கு செல்வதில்லை. வேறுபகுதிக்கு சென்று குழந்தைகளை தேட தொடங்குவார். இதற்காக டெல்லி புறநகர் பகுதியில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று குழந்தைகளை கடத்தி உள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த குழந்தையின் கழுத்தை அறுத்து கழிவு நீர் ஓடையில் வீசிவிட்டு சென்றார். அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை உயிர் பிழைத்துவிட்டது. அந்த சிறுமி கொடுத்த தகவலின் பேரில் டெல்லி போலீசார், கொலைகாரனை தேட தொடங்கினர். இதற்காக டெல்லி புறநகர் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தும், இன்பார்மர்கள் மூலமும் சிறுமியை சீரழித்தவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில் கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி, ரோகிணியில் உள்ள சுக்பீர்நகர் பஸ்நிலையம் அருகே ரவீந்திரகுமார் சிக்கினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது அவர்தான் 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், டெல்லி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறினார். அவர்கள் மூலம் தன்னை கண்டுபிடித்துவிடாமல் இருக்க அவர்களை உடனே கொன்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ரவீந்திரகுமார் கூறிய தகவல்களை கேட்டு மிரண்டு போன போலீசார், அவரால் கடத்தி கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பட்டியலை திரட்டினர். இதில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ரவீந்திரகுமார் மீது டெல்லி கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ஏதுமறியா குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ரவீந்திரகுமாருக்கு கோர்ட்டு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.