திரவுபதி முர்முவுக்கு வாக்களிக்க கர்நாடக எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு
- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த 18-ந்தேதி நடைபெற்றது.
- கர்நாடகாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெங்களூரு:
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. கர்நாடகாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஆகியோர் தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகள் இதனை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து சொகுசு ஓட்டலில் தங்க வைத்துள்ளனர்.
அவர்களுக்கு ஆடம்பர அறைகள் ஒதுக்கப்பட்டு மதுபானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் திரவுபதி முர்முக்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட கர்நாடக மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.