வேற இடமே கிடைக்கலையா? தண்டவாளத்தில் PUBG விளையாடிய வாலிபர்கள் ரெயில் மோதி உயிரிழப்பு
- 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விளையாட்டு மோகத்தால் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது. செல்போனில் அதிகம் நேரம் செலவிடுவதால் உடல் நலம், மன நலம் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகளில் தெரியவந்தாலும் அதனை யாரும் கண்டுகொள்வதில்லை. செல்போன் விளையாட்டால் சுற்றி என்ன நிகழ்வது என்பது கூட தெரியாமல் அதிலேயே மூழ்கி விடுகின்றனர்.
அப்படி தான், ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் PUBG விளையாடிக்கொண்டிருந்த பீகாரைச் சேர்ந்த வாலிபர்கள் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் ரெயில் தண்டவாளத்தில் காதில் இயர்போன் அணிந்து 3 வாலிபர்கள் PUBG விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ரெயில் வருவதை அறியாமல் விளையாட்டில் மூழ்கி இருந்த அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் 3 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாட்டு மோகத்தால் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகளின் விளையாட்டு பழக்கத்தை பெற்றோர்கள் கண்காணித்து, எதிர்காலத்தில் இதுபோன்ற அவலங்களைத் தடுக்க பொது இடங்களில் விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.