புத்தாண்டு கொண்டாட்டம்- சொகுசு விடுதியில் மர்மமாக இறந்து கிடந்த 3 நண்பர்கள்
- இறந்து கிடந்தவர்களின் பெயர்கள் ஆசுதோஸ் ராணா, முகேஷ் சிங், சன்னி சவுதாரி என்று தெரியவந்தது.
- மர்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்ட போலீசாருக்கு நேற்று முன்தினம் ஒரு புகார் வந்தது. அதில் தனது சகோதரர் படீர்வா நகருக்கு செல்வதாக கூறி சென்றவர், பின்னர் போன் அழைப்புகளை ஏற்கவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.
புகாரின் பேரில் போலீசார் அவரை தேடியபோது, படீர்வா பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் அவரது மோட்டார் சைக்கிள் நிற்பதை கண்டனர். அங்கு விசாரித்தபோது அவரும், மற்ற 2 பேரும் சேர்ந்து அறை எடுத்து தங்கி இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சென்று, அவர்களின் அறை கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 3 பேரும் நினைவிழந்த நிலையில் கிடந்தனர்.
பின்னர் தடய அறிவியல் குழுவினரும், மருத்துவ குழுவினரும் வரழைக்கப்பட்டு சோதனை செய்தபோது அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவ குழுவினர் அறிவித்தனர். தடய அறிவியல் பிரிவினர் தடயங்களை சேகரித்தனர்.
இறந்து கிடந்தவர்களின் பெயர்கள் ஆசுதோஸ் ராணா, முகேஷ் சிங், சன்னி சவுதாரி என்று தெரியவந்தது. ஜம்மு பகுதியில் வசித்த நண்பர்களான இவர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இங்கு சுற்றுலா வந்ததாக தெரியவந்துள்ளது.
அவர்கள் மர்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல் கட்ட விசாரணையில் அவர்கள் தங்கிய அறையில், கரி மூலம் செயல்படும் ஹீட்டர் சாதனம் ஒன்று இருந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட புகையால் அவர்கள் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் சோதனைகளின் முடிவில்தான் அவர்கள் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.