மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆர்.டி.ஓ. அலுவலக உதவியாளர் வீட்டில் ரூ.9 கோடி தங்கம், பணம் பறிமுதல்
- நரசிம்ம ரெட்டி 1984-ம் ஆண்டு ரூ.650 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
- தற்போது ரூ.40,000 சம்பளமாக வாங்கும் நரசிம்ம ரெட்டிக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தது என விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி (வயது 55). நெல்லூரில் உள்ள துணை வட்டாரப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
நரசிம்ம ரெட்டி வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரமாதேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நரசிம்ம ரெட்டி வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து 2 கிலோ தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ரூ 1. 1 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் முதலீடுகள், ரூ. 10 லட்சம் மதிப்பிலான பாலிசி ஆவணங்கள், நெல்லூரில் வாங்கப்பட்டுள்ள 18 வீட்டு மனை பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
அவரது மேஜையில் இருந்து ரூ.7.5 லட்சம் மதிப்பிலான ரூ.2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் ரூ.9 கோடி மதிப்பிலான பொருட்கள், பணம் கைபற்றப்பட்டுள்ளன.
கூட்டுறவு வங்கிக் கிளைகளில் உள்ள அவரது லாக்கரை திறந்து சோதனை செய்தால் மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நரசிம்ம ரெட்டி 1984-ம் ஆண்டு ரூ.650 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். தற்போது ரூ.40,000 சம்பளமாக வாங்கும் நரசிம்ம ரெட்டிக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தது என விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தனது அலுவலகம் மற்றும் சோதனை சாவடிகளில் லஞ்சமாக பெற்ற பணத்தை அதிக வட்டிக்கு கொடுத்து சொத்து சேர்த்ததாக தெரிவித்துள்ளார்.