இந்தியா

உலகின் 4-வது மிகப்பெரிய கோடீஸ்வரர் கவுதம் அதானி- பெண் கோடீஸ்வரர்களில் சாவித்ரி ஜிண்டாலுக்கு 13-வது இடம்

Published On 2022-07-19 04:34 GMT   |   Update On 2022-07-20 00:56 GMT
  • கோடீஸ்வரர் பட்டியலில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால் 91-வது இடத்தில் உள்ளார்.
  • கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் கடந்த 2005-ம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அதன்பிறகு அவரின் மனைவி சாவித்ரி ஜிண்டால் தொழிலை வழிநடத்தி சென்றார்.

புதுடெல்லி:

உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

இதில் அமெரிக்க தொழிலதிபர் எலான்மஸ்க் 230 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். லூயிஸ் உயிட்டன் பெர்னார்ட் அர்னால்டு 2-வது இடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெப்பெசோஸ் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான கவுதம் அதானி 4-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 114 பில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 மற்றும் 2022-ம் ஆண்டுக்கு இடையில் அவரது நிகர சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலரில் இருந்து 90 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது. அதானி குழுமம் இந்தியாவின் முதல் 3 கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

அதானி குழுமம் ஆற்றல், துறைமுகங்கள் மற்றும் தளவாடங்கள், சுரங்கம் மற்றும் வளங்கள், எரிவாயு, பாதுகாப்பு மற்றும் விண்வெளி மற்றும் விமான நிலையங்கள் என பல்வேறு வணிகங்களுடன் 197.49 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்துடன், பொதுவில் பட்டியலிடப்பட்ட 7 நிறுவனங்களை கொண்டுள்ளது. அதன் ஒவ்வொரு வணிக பகுதியிலும் குழுமம் இந்தியாவில் தலைமைத்துவ நிலையை நிறுவி உள்ளது என்று அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை பெற்றார். இந்நிலையில் தற்போது கவுதம் அதானி உலக பணக்காரர் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

கடந்த வாரம் மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது முன்னாள் மனைவியிடன் இணைந்து நிறுவிய அறக்கட்டளைக்கு படிப்படியாக தனது சொத்து அனைத்தையும் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறி இருந்தார். இதனால் உலக பணக்காரர் பட்டியலில் அவர் சரிவை சந்தித்துள்ளார்.

இந்த கோடீஸ்வரர் பட்டியலில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால் 91-வது இடத்தில் உள்ளார். இவரது கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் கடந்த 2005-ம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அதன்பிறகு அவரின் மனைவி சாவித்ரி ஜிண்டால் தொழிலை வழிநடத்தி சென்றார். அதன்பிறகு அரசியலிலும் இறங்கினார்.

இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான இவரது சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு 4.8 பில்லியன் டாலராக இருந்தது. நடப்பாண்டில் சொத்து மதிப்பு 17.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் அவரின் சொத்து மதிப்பு 12 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

அதேநேரம் கடந்த 2019 மற்றும் 2020-ல் இவரின் சொத்து மதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது. 2018-ம் ஆண்டில் சொத்து மதிப்பு 8.8 பில்லியன் டாலராக இருந்தது. 2019-ல் 5.9 பில்லியன் டாலராகவும், 2020-ல் 4.8 பில்லியன் டாலராகவும் சரிவினை கண்டிருந்தது.

தனது கணவரின் வெற்றி மந்திரத்தின் மூலம் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் சாவித்ரி ஜிண்டால் உலகின் பணக்காரர் பட்டியலில் முதல் 13 பெண் கோடீஸ்வரர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.

Tags:    

Similar News