உயிரை காப்பாற்றிய வாலிபரை பின்தொடர்ந்து செல்லும் நாரை
- உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாலிபருடன் ஒரு நாரை கடந்த ஒரு வருடமாக நட்பாக பழகி வருகிறது.
- ஆரிப் மோட்டார் சைக்கிளில் எங்கு சென்றாலும் அந்த நாரை அவரை பின் தொடர்ந்து பறந்து செல்கிறது.
லக்னோ:
உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாலிபருடன் ஒரு நாரை கடந்த ஒரு வருடமாக நட்பாக பழகி வருகிறது. அவர் செல்லும் இடங்களுக்கு கூடவே பறந்து செல்கிறது. அந்த வாலிபரின் பெயர் முகமது ஆரிப். உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு நாரை பறவை ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு காலில் காயத்துடன் சாலையோரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
உடனே ஆரிப் அந்த நாரையை மீட்டு அதற்கு மருத்துவ சிகிச்சை அளித்து அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். நாரையின் காலில் இருந்த காயம் குணமாகும் வரை அதை தனது வீட்டிலேயே வைத்து உணவளித்து வந்தார்.
நாரையின் காயம் குணமடைந்தவுடன் அதை வெளியில் கொண்டு சென்று பறக்கவிட்டார். அது எங்கும் பறந்து செல்லவில்லை. ஆரிப்புடனேயே தங்கி விட்டது. அத்துடன் அந்த நாரை ஆரிப்புடன் மிகவும் நட்புணர்வுடன் நெருக்கமாக பழகி வருகிறது. கடந்த ஒரு வருடமாகவே இந்த பாசப்பிணைப்பு தொடருகிறது.
ஆரிப் வீட்டில் அவரது மனைவி, 2 குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் அந்த நாரையும் ஒரு குடும்ப உறுப்பினராகவே வசித்து வருகிறது. அந்த குடும்பத்தினரும் நாரையை பாசமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே ஆரிப் மோட்டார் சைக்கிளில் எங்கு சென்றாலும் அந்த நாரை அவரை பின் தொடர்ந்து பறந்து செல்கிறது. சாலைகள், வயல் வெளி, வீடு என ஆரிப் செல்லும் இடங்களில் எல்லாம் அந்த நாரை அவரை நிழல்போல தொடருகிறது. அந்த அளவுக்கு ஆரிப்புக்கும், அந்த நாரைக்கும் நட்புணர்வு உள்ளது.
ஆரிப்புடன், நாரை பறந்து செல்லும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்ப்பவர்கள் பறவையின் நட்புணர்வை பாராட்டி வருகிறார்கள்.