காதலிக்க மறுத்த தோழியை வெட்டிய சினிமா நடிகர்- தடுத்த தம்பியை வெட்டிக் கொன்றார்
- தனது ஒரே மகன் ஆத்திரத்தில் தெரியாமல் தவறு செய்து விட்டதாக கூறி அவரது தாயும் உறவினர்களும் சேர்ந்து கொலையை மறைத்துவிட்டனர்.
- சங்கவி பள்ளிப் பருவம் முதல் ஒன்றாக பழகியதால் உன்னை நண்பனாக தான் கருதுகிறேன் என தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், எல்.பி.நகரை சேர்ந்தவர் சிவக்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் சங்கவி. அவரது சகோதரர் பிருத்வி. இவர்கள் 3 பேரும் பள்ளி பருவம் முதல் ஒன்றாக படித்து வந்தனர்.
இதனால் 3 பேரும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் படித்த சிவகுமார் கடந்த 2018-ம் ஆண்டு பட்டப் படிப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றார்.
பிறகு டாக்டருக்கு படிக்க விரும்பிய சிவகுமார் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்ற பிறகும் தேர்வில் போதிய மதிப்பெண் பெற முடியவில்லை. இதனால் ஹோமியோபதி டாக்டருக்கு படித்தார். சினிமா மீது ஆர்வம் கொண்ட சிவகுமார் தமிழ் படம் ஒன்றில் நடித்தார். அதன்பின் சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் ஊர் சுற்றி வந்தார். இதனை அவரது தந்தை கண்டித்ததால் அவரை சுத்தியலால் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சில நாட்கள் சிகிச்சை பெற்று பின்னர் இறந்தார்.
தனது ஒரே மகன் ஆத்திரத்தில் தெரியாமல் தவறு செய்து விட்டதாக கூறி அவரது தாயும் உறவினர்களும் சேர்ந்து கொலையை மறைத்து விட்டனர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக சங்கவியை சந்தித்த சிவகுமார் அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு சங்கவி பள்ளிப் பருவம் முதல் ஒன்றாக பழகியதால் உன்னை நண்பனாக தான் கருதுகிறேன் என தெரிவித்தார்.
இருப்பினும் சிவகுமார் தன்னை காதலிக்கும்படி சங்கவியிடம் வற்புறுத்தி வந்தார். நேற்று முன்தினம் சங்கவி வீட்டிற்கு சென்ற சிவகுமார் மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் தான் தயாராக எடுத்து வந்த கத்தியை எடுத்து சங்கவியை வெட்டினார்.
இதனைக் கண்ட அவரது சகோதரர் பிருத்வி சிவகுமாரை தடுத்து நிறுத்தினார். அவரை சிவகுமார் வெட்டினார். படுகாயம் அடைந்த பிருத்வி ரத்த வெள்ளத்தில் துடித்துடுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனைக் கண்ட சங்கவி கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிவகுமாரை பிடித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிவகுமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.