குடும்பத்தினருடன் ஆட்டோவில் புதுச்சேரியை சுற்றிப்பார்த்த திரிபுரா எம்.எல்.ஏ.
- கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தீபங்கர்சென் எம்.எல்.ஏ.. தனது குடும்பத்தினருடன் தங்கினார்.
- குடும்பத்தினருடன் ஆட்டோவில் வலம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு, பெலோனியா தொகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. தீபங்கர்சென். இவரது மனைவி அங்குள்ள அரசு பள்ளி ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தீபங்கர் சென் எம்.எல்.ஏ., தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தார்.
புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக புதுச்சேரி ஓட்டல்களில் அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அவர் தங்குவதற்கு ஓட்டல்களில் அறைகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், புதுச்சேரி அஜிஸ் நகரில் உள்ள மார்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தீபங்கர்சென் எம்.எல்.ஏ.. தனது குடும்பத்தினருடன் தங்கினார்.
கட்சி அலுவலகத்தில் இருந்து நேற்று காலை குடும்பத்தினருடன் ஆட்டோவில் புறப்பட்ட தீபங்கர் சென் எம்.எல்.ஏ., புதுச்சேரி சட்டசபை வந்தார். ஆட்டோவில் குடும்பத்தினரை காத்திருக்க வைத்துவிட்டு, தனியாக சட்டசபைக்குள் சென்ற தீபங்கர் சென் எம்.எல்.ஏ.,வை சபை காவலர்கள் நிறுத்தி விசாரித்தனர்.
தான் எம்.எல்.ஏ., என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்த பின்பு சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். சட்டசபைக்கு வந்த தீபங்கர் சென் எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
சில நிமிடம் அமைச்சருடன் பேசிய பின்பு, சட்டசபையில் இருந்து மீண்டும் குடும்பத்தினருடன் ஆட்டோவில் புறப்பட்டு, புதுச்சேரியில் பல இடங்களை பார்வையிட்டுவிட்டு புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரான ஆரோவில் சென்றார்.
இதுகுறித்து தீபங்கர் சென் எம்.எல்.ஏ., கூறுகையில், 2 நாட்களுக்கு முன் தமிழகம் வந்தேன். தற்போது புதுச்சேரியை சுற்றிப் பார்க்க வந்துள்ளேன். குடும்பத்தினருடன் ஆட்டோவில் வலம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. புதுச்சேரி அழகாக உள்ளது. இங்கு உள்ள இலவச திட்டங்கள் போல் திரிபுராவில் ஏதும் கிடையாது. குடும்பத்தினருடன் ஆட்டோவில் பயணிப்பது பெரிய விஷயம் இல்லை' என்றார்.