ஊராட்சிமன்ற தலைவர் தேர்தல்: காரைக்குடி எம்.எல்.ஏ. மனைவியின் வெற்றி செல்லும்- சுப்ரீம் கோர்ட்
- ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் காரைக்குடி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவியும், பிரியதர்ஷினி என்பவரும் போட்டியிட்டனர். .
- சிறிது நேரத்தில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும் அவருக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவர் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்தலில் காரைக்குடி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவியும், பிரியதர்ஷினி என்பவரும் போட்டியிட்டனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் 62 வாக்கு வித்தியாசத்தில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறிது நேரத்தில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும் அவருக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து தேவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை, தேவியின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேவி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார் அமர்வு, காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தேவியின் வெற்றி செல்லாது என்ற சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ரத்து செய்து, தேவியின் வெற்றி செல்லும் என்று தெரிவித்தது.
இதனிடையே பிரியதர்ஷினி சார்பில் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று மீண்டும் விசாரித்தது. மனுதாரர் பிரியதர்ஷினி சார்பில் அ.ராஜராஜன் ஆஜராகி, வாக்குகள் முழுமையாக எண்ணப்படாத நிலையில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியை பரிசீலனை செய்யாமல் வெற்றி செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்ததை மாற்றியமைக்க வேண்டும் என வாதிட்டார். இந்த வாதத்தை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு பிரிதர்ஷினியின் மனுவை தள்ளுபடி செய்தது.