அணிவது ரூ.10 லட்சம் சூட்.. பயணிப்பது ரூ.8,400 கோடி விமானம்.. மோடி பேசலாமா! - கெஜ்ரிவால் பதிலடி
- தனக்கென சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளாமல் ஏழைகளுக்கு கட்டிக்கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்
- 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டைக் கட்டியவர், 8,400 கோடி ரூபாய் மதிப்பில் தனி விமானத்தில் பயணிப்பவர்
டெல்லி மாநில தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அசோக் நகரில் குடிசைவாழ் மக்களுக்காக கட்டப்பட்டுள்ள 1675 அடுக்குமாடி குடியிருப்புகளை நேற்று [வெள்ளிக்கிழமை] பிரதமர் மோடி திறந்து வைத்து பேசினார்.
தனக்கென சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளாமல் ஏழைகளுக்கு கட்டிக்கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் டெல்லி முதல்வராக இருந்தபோது தனக்கென ' ஷீஷ் மஹால் ' [கண்ணாடி மாளிகை] கட்டியதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கினார்.
மேலும் டெல்லி மக்களுக்கான மத்திய அரசின் சலுகைகளை ஆம் ஆத்மி அரசு தடுப்பதாக குற்றம் சாட்டினார்.
கடந்த 10 ஆண்டுகளில், டெல்லி ஒரு 'AAPda' (பேரழிவால்) சூழப்பட்டுள்ளது. அன்னா ஹசாரேவை முன் நிறுத்தியதன் மூலம், நேர்மையற்ற சிலர் டெல்லியை பேரழிவை நோக்கித் தள்ளியுள்ளனர். டெல்லி மக்கள் இனி இந்த AAPdaவை சகித்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி பேசிய 43 நிமிடங்களில் 39 நிமிடங்கள் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், டெல்லி மக்களையுமே மிகப் பெரிய அளவில் அவதூறு செய்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி பல விஷயங்களைச் செய்துள்ளது. பாஜக தான் ஏழைகளுக்கு எதிரி. டெல்லியில் உள்ள குடிசைகளை இடித்ததன் மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்களை அவர்கள் வீடிழக்க செய்தனர். டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜகவுக்கு முதல்வர் முகம் இல்லை, சாதனைகளும் இல்லாததால் அக்கட்சி தான் பேரழிவில் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் மோடியின் ஷீஷ் மஹால் விமர்சனம் குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டைக் கட்டியவர், 8,400 கோடி ரூபாய் மதிப்பில் தனி விமானத்தில் பயணிப்பவர், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சூட் அணிந்த ஒருவர் ஷீஷ் மஹாலைப் பற்றி பேசுவது சரியல்ல.
நான் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட விரும்பவில்லை. நான் அவதூறு அரசியல் செய்யவில்லை. கடந்த பத்து வருடங்களில் போதுமான அளவு வேலை செய்துள்ளேன். வளர்ச்சி அரசியலில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
அறிக்கைகளின்படி, ரூ.10 லட்சம் மதிப்பிலான " நரேந்திர தாமோதர்தாஸ் மோடி " என்ற பெயரில் பிரத்தேயகமாக பிப்ரவரி 2016 இல் சூரத்தைச் சேர்ந்தவரால் தயாரிக்கப்பட்டு மோடி அணிந்த சூட் உடை, ₹ 4.3 கோடிக்கு ஏலம் போனது. கின்னஸ் புத்தகத்திலும் அது இடம் பிடித்தது.