மாலத்தீவுக்கு எப்போதும் இந்தியா உறுதுணையாக இருக்கும்: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
- மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி 3 நாள் அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார்.
- மாலத்தீவுக்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு என்றார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்.
புதுடெல்லி:
மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா கலீல் அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார்.
இந்நிலையில், அப்துல்லா கலீல் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, இந்தியா வழங்கும் நிதி உதவி வாயிலாக மாலத்தீவில் மூன்றாம் கட்ட சமூக மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.
இதுதொடர்பாக அப்துல்லா கலீல் கூறுகையில், இந்தியா-மாலத்தீவு இடையிலான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கூட்டுப் பார்வையை நனவாக்குவதில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதியுடன் இருக்கிறார் என தெரிவித்தார்.
அதன்பின் நடந்த கூட்டத்தில் பேசிய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு உள்ளூர் கரன்சிகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு இருதரப்பும் கையொப்பமிட்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் எங்கள் உறவை வலுப்படுத்தி உள்ளோம். மாலத்தீவுக்கு எப்போதும் இந்தியா உறுதுணையாக இருக்கும். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசு கொள்கையின் உறுதியான வெளிப்பாடாக மாலத்தீவு திகழ்கிறது என தெரிவித்தார்.