இந்தியா

வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள்: பா.ஜ.க. மீது நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

Published On 2023-06-08 02:48 GMT   |   Update On 2023-06-08 02:48 GMT
  • வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன.
  • நான் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே ஒருபோதும் பாகுபாடு பார்த்தது இல்லை.

பாட்னா :

பீகார் மாநிலத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோரை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, பாட்னாவில் உள்ள ஹஜ்பவனில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டு, ஹஜ் யாத்திரை செல்வோரை வழியனுப்பி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் இந்த மாநிலத்துக்கு சேவையாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்த நாள் முதல், சகோதரத்துவ உணர்வை உறுதி செய்து வந்திருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சச்சரவை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.

வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. இந்த முயற்சிகளுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நான் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே ஒருபோதும் பாகுபாடு பார்த்தது இல்லை. இந்த நாட்டின் முஸ்லிம்கள் இந்தியாவில் வசிப்பவர்கள்தான், அவர்கள் வேறெங்கும் இருந்து வந்தவர்கள் அல்ல என்று என் தந்தை எனக்கு போதித்து இருக்கிறார்.

ஆனால் இந்த நாட்களில் அரசியல் சாசனத்துக்கு எதிரான எல்லாவிதமான செயல்களும் நடைபெற்று வருகின்றன. நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவும் அவர்கள் (பா.ஜ.க.வினர்) முயற்சிக்கிறார்கள். குறிப்பாக, சுதந்திர போராட்ட வரலாற்றை மாற்றி எழுத முயற்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக ஹஜ் யாத்திரை தடைப்பட்டு வந்த நிலையில், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கி இருப்பது குறித்து நிதிஷ்குமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பீகாரில் இந்த ஆண்டு 2,399 பெண்கள் உள்பட 5,638 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

Similar News