உ.பியில் இரண்டு வெவ்வேறு விபத்துகள்- 10 பேர் உயிரிழப்பு
- இரண்டு விபத்துகளில் சுமார் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- கார் ஒன்று லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலிபிட் மற்றும் சித்ரகூட் மாவட்டங்களில் நடந்த சாலை விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துகளில் சுமார் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பிலிபிட்டில், நியோரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 11 பேருடன் வந்த கார் மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இதில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கதிமாவைச் சேர்ந்த 11 பேர் மாருதி எர்டிகா காரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.
அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மூன்று பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், சிகிச்சையின் போது இருவர் இறந்ததாகவும் - மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும்" போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் நான்கு பேர் மேற் சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சித்ரகூடில் நடந்த விபத்து குறித்து, போலீஸ் சூப்பிரண்டு அருண் குமார் சிங் கூறுகையில், "கார் ஒன்று லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ராய்புரா காவல் நிலையப் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நடந்தது. ராய்புராவில் இருந்து லாரி வந்துகொண்டிருக்கும்போது, கார் பிரயாக்ராஜில் இருந்து வந்து கொண்டிருந்தது. அதிலும் 11 பேர் இருந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
மேலும், இரண்டு சம்பவங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.