VIDEO: தானியங்கி கதவை தாண்டிக் குதித்த நூற்றுக்கணக்கானோர்.. டெல்லி மெட்ரோ நிலையத்தில் குழப்பம்
- AFC (தானியங்கி கட்டண வசூல்) வாயிலில் ஏறி குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
- டெல்லி மெட்ரோ நிர்வாகம்(DMRC) விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி மெட்ரோ நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் கட்டணம் செலுத்தாமல் நிலையத்தின் வெளியேறும் AFC (தானியங்கி கட்டண வசூல்) வாயில் கதவில் ஏறி குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மெட்ரோ நிலையத்தின் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு டெல்லி மெட்ரோ நிர்வாகம்(DMRC) விளக்கம் அளித்துள்ளது.
அதன் விளக்கத்தில், இந்த வீடியோ பிப்ரவரி 13 அன்று ஜமா மசூதி மெட்ரோ நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டது.
பிப்ரவரி 13 ஆம் தேதி மாலையில், ஜமா மசூதி மெட்ரோ நிலையத்தில் பயணிகளின் கூட்டம் திடீரென அதிகரித்ததால் சிலர் வெளியேறும் வாயிலில் குதித்து கடக்க முயன்றனர்.
இதனால் அங்கு பயணிகளிடையே தற்காலிகமான சலசலப்பு நிலவியது. அவர்களை சமாளிக்க பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் போதுமான அளவு இருந்தனர்.
நிலைமை ஒருபோதும் கட்டுப்பாட்டை மீறவில்லை. வாயில்களில் திடீரென ஏற்பட்ட நெரிசல் காரணமாக சில பயணிகளின் தற்காலிக எதிர்வினையே இது. விரைவில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.