VIDEO: ராணுவ அதிகாரியையும் அவரது மகனையும் பேஸ்பால் மட்டையால் 45 நிமிடம் புரட்டியெடுத்த பஞ்சாப் போலீஸ்
- எங்களை குச்சிகள், கட்டைகள் மற்றும் பேஸ்பால் மட்டைகளால் தாக்கினர்.
- நாங்கள் மயங்கி விழுந்தோம். மீண்டும் கண்விழித்து பார்க்கும்போது அவர்கள் எங்களை அப்போதும் தாக்கிக்கொண்டுதான் இருந்தனர்.
பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேர் ஒரு ராணுவ அதிகாரியையும் அவரது மகனையும் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த மார்ச் 14 அதிகாலை ராணுவ அதிகாரி ஒருவரும் அவரது மகனும் தங்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்த உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது சாதாரண உடையில் வந்த மூன்று போலீஸ் அதிகாரிகள் தங்கள் காரை அங்கே நிறுத்த, ராணுவ அதிகாரியை அவரது காரை எடுக்க சொல்லியுள்ளனர். அவர்கள் மிரட்டலாக சொன்னதால், ராணுவ அதிகாரி தனது காரை எடுக்க மறுத்துள்ளார். இதனால் ராணுவ அதிகாரியை போலீஸ்காரர்களில் ஒருவர் குத்தியுள்ளார். தடுக்க வந்த அவரது மகனையும் தாக்கியுள்ளனர்.
ராணுவ அதிகாரியின் மகன் கூற்றுப்படி, அவர்கள் எங்களை குச்சிகள், கட்டைகள் மற்றும் பேஸ்பால் மட்டைகளால் தாக்கினர். நாங்கள் மயங்கி விழுந்தோம்.
மீண்டும் கண்விழித்து பார்க்கும்போது அவர்கள் எங்களை அப்போதும் தாக்கிக்கொண்டுதான் இருந்தனர். குறைந்தது 45 நிமிடங்கள் அவர்கள் எங்களை தாக்கினர் என்று தெரிவித்தார். மேலும் அந்த போலீஸ்காரர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் ராணுவ அதிகாரியின் கை முறிந்தது. அவரது மகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
'இந்த தாக்குதல் தொடர்பாக நாங்கள் இரண்டு நாட்களாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முயற்சித்தோம், ஆனால் போலீசார் எங்களுக்கு உதவவில்லை. எனக்கு மிரட்டல் அழைப்புகளும் வந்தன' என்று மகன் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் காவல்துறை இறுதியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் 12 அதிகாரிகளை பாட்டியாலா காவல்துறை இடைநீக்கம் செய்துள்ளது.