உலகம்

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை படை வெடிகுண்டுத் தாக்குதல்.. 5 பேர் பலி - பரபரப்பு வீடியோ

Published On 2025-03-17 10:41 IST   |   Update On 2025-03-17 10:56:00 IST
  • தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி, தனது வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில், பாதுகாப்பு படையினரின் வாகனமும் வெடித்து சிதறியது.
  • பலுச் விடுதலை படை நடத்திய ரெயில் கடத்தலில் 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக அவ்வமைப்பு கூறியிருந்தது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த வாரம் ரெயிலை கடத்திய பிரிவினைவாத பலுச் விடுதலை படை, நேற்று பாதுகாப்புப் படையினர் சென்ற ராணுவ வாகனத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பரபரப்பூட்டும் வீடியோவை பலுச் விடுதலை படை தற்போது வெளியிட்டுள்ளது.

நேற்று காலையில் நோஷிகி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினர் வாகனங்களில் சென்றபோது, கான்வாயில் புகுந்த ஒரு வாகனம் திடீரென வெடித்தது. தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி, தனது வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில், பாதுகாப்பு படையினரின் வாகனமும் வெடித்து சிதறியது. 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பலுச் விடுதலை படை நடத்திய ரெயில் கடத்தலில் 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக அவ்வமைப்பு கூறியிருந்தது.  

கடந்த வாரம் இதே மாகாணத்தில், பலுச் விடுதலை படையினர், கூடலார் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகே 440 பயணிகளை ஏற்றி சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தி பயணிகளை சிறைபிடித்தனர்.

அதில் பெரும்பாலானோர் பாதுகாப்பு ஊழியர்கள் ஆவர். மறுநாள் ராணுவம் நடத்திய மீட்பு நடவடிக்கையில் 33 பயங்கரவாதிகளையும் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு, 21 பயணிகளையும் நான்கு துணை ராணுவ வீரர்களையும் பயங்கரவாதிகள் கொன்றனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News