சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது? நாசா கொடுத்த புது அப்டேட்
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் புதிய தேதியை அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (மார்ச் 18) பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.
நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவது தொடர்ந்து தாமதமாகி வந்தது.
இந்த நிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விண்வெளி வீரர்கள் நாளை உள்ளூர் நேரப்படி மாலை 5.57 மணிக்கு (இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.