VIDEO: பாத்ரூம் தண்ணீரை பயன்படுத்தி மருத்துவர்களுக்கு உணவு சமைத்தார்களா?
- கல்லூரி நிர்வாகிகள், பாத்திரங்களை கழுவுவதற்கு மட்டுமே பாத்ரூம் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.
- இந்த சம்பவம் சுகாதாரம் தொடர்பானது என்பதால் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் மிஸ்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியில் தேசிய அளவிலான மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர்களுக்கு பாத்ரூம் தண்ணீரை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், கழிப்பறை குழாயில் இருந்து வரும் தண்ணீரை சமையல் செய்யும் ஊழியர்கள் பயன்படுத்துகின்றனர்.
நாடு முழுவதும் இருந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்ட தேசிய அளவிலான மருத்துவ மாநாடு பிப்ரவரி 6-ந்தேதி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, பங்கேற்பாளர்களுக்கு இந்த உணவு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகிகள் கூறுகையில், "பாத்திரங்களை கழுவுவதற்கு மட்டுமே பாத்ரூம் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது" என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சுகாதாரம் தொடர்பானது என்பதால் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் மிஸ்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உணவு தயாரிப்புக்கு பாத்ரூம் தண்ணீர் பயன்படுத்தப்படவில்லை என்று கூறினாலும், இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ ஆய்வு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது.