தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
- தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
- ரத்தன் டாடாவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
ஸ்ரீ ரத்தன் டாடா ஜி ஒரு தொலைநோக்கு வணிகத் தலைவர். இரக்கமுள்ள ஆன்மா மற்றும் ஒரு அசாதாரண மனிதர்.
இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றிற்கு அவர் நிலையான தலைமையை வழங்கினார்.
ஸ்ரீ ரத்தன் டாடாஜியுடன் எண்ணற்ற தொடர்புகளால் என் மனம் நிறைந்திருக்கிறது.
நான் முதல் மந்திரியாக இருந்தபோது குஜராத்தில் அவரை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். நான் டெல்லி வந்தபோதும் இந்த தொடர்புகள் தொடர்ந்தன.
அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பல்வேறு தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.