மோடியை உளவியல் ரீதியாக உடைத்துள்ளோம் - ராகுல் காந்தி
- ஜம்மு காஷ்மீரில் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதில் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட சட்டசபை தேர்தலில் 24 தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (25-ந்தேதி) 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 26 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 239 பேர் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "பாஜக அரசு மக்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகளான நாம் அவர்கள் முன் நிற்கிறோம். உடனடியாக U Turn எடுக்கிறார்கள். பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக உடைத்துள்ளோம்.
இந்தியாவில், யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக தரம் உயர்த்தப்பட்டதை நாங்கள் பார்த்தோம், ஆனால் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக தரம் தாழ்த்தப்பட்டுள்ளது. உங்கள் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே, உங்கள் மாநிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்களின் முதன்மை கோரிக்கை.
பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் வன்முறை கலாச்சாரத்தை நிலைநிறுத்தி மக்களிடையே பிளவைத் தூண்டுகிறார்கள். அவர்களின் அரசியல் குரோதத்தில் வளர்கிறது.
ஒரு பக்கம் (பாஜக) முரண்பாட்டை விதைப்பவர்கள் உள்ளனர், மறுபுறம் (இந்தியா கூட்டணி) அன்பை ஊக்குவிப்பவர்கள் உள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மற்றும் மணிப்பூரிலிருந்து மகாராஷ்டிரா வரையிலான எங்கள் பயணம் வெறுப்பு யாருக்கும் பயனளிக்காது என்ற ஒரே ஒரு செய்தியை கொண்டு சென்றது" என்று தெரிவித்தார்.