குட்டைப் பாவாடை, கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வர தடை.. சித்திவிநாயகர் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள்
- ஸ்ரீ சித்திவிநாயக கணபதி கோயில் அறக்கட்டளை (SSGTT) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- பக்தர்கள் இந்திய பாணி உடைகளை அணிந்து வர ஊக்குவிக்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபாதேவி அருகே பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
பாலிவுட் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இக்கோவிலுக்கு பிரதானமாக வருகை தந்து வழிபாடு நடத்துவது வழக்கம். ஆண்டு முழுவதிலும் பக்தர்கள் இங்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் பக்தர்களுக்கு ஆடை உள்ளிட்ட விஷயங்களில் சித்திவிநாயகர் கோவில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/01/29/8705194-jetcrash10.jpg)
இதுதொடர்பாக ஸ்ரீ சித்திவிநாயக கணபதி கோயில் அறக்கட்டளை (SSGTT) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"வெட்டப்பட்ட அல்லது கிழிந்த துணியுடன் கூடிய கால்சட்டை அணிந்த பக்தர்கள், குட்டைப் பாவாடைகள் அல்லது உடல் உறுப்புகளை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. புதிய ஆடை கட்டுப்பாடு அடுத்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது.
பக்தர்கள் இந்திய பாணி உடைகளை அணிந்து வர ஊக்குவிக்கப்படுகிறது. பொருத்தமற்ற உடையில் வருகை தருவோர் குறித்து பக்தர்கள் சார்ப்பில் கோயில் அறக்கட்டளைக்குப் பல புகார்கள் வந்ததை அடுத்து கோயிலின் புனிதத்தைக் காக்கும் வகையில் ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்தக் கோயில் அறக்கட்டளை முடிவு செய்தது.