அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு.. மைசூருவில் அதிர்ச்சி சம்பவம்
- அமெரிக்காவில் வசிக்கும் தனது சகோதரர் பரத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சேத்தன் போன் செய்தார்.
- சேத்தன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் வேலை செய்துவந்தார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (திங்கள்கிழமை) காலை மைசூருவில் விஸ்வேஸ்வரய்யா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
போலீசாரின் கூற்றுப்படி, இறந்தவர்கள் சேத்தன் (45), அவரது மனைவி ரூபாலி (43), அவர்களது 15 வயது மகன் மற்றும் சேதனின் தாயார் பிரியம்வதா (62) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சேத்தன் முதலில் மூவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.
சேத்தனின் தாயார் பிரியம்வதா குடியிருப்பின் ஒரு வீட்டில் இறந்து கிடந்தனர். அதில் அவர் தனியாக வசித்து வந்தார். மற்ற மூவரும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் வசித்து வந்த மற்றொரு வீட்டில் இறந்து கிடந்தனர்.
அமெரிக்காவில் வசிக்கும் தனது சகோதரர் பரத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சேத்தன் போன் செய்து, தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்யபோவதாக கூறியுள்ளார். பரத் உடனடியாக ரூபாலியின் பெற்றோரை அழைத்து சேத்தனின் வீட்க்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார்.
ஆனால் ரூபாலியின் பெற்றோர் அங்கு சென்றபோது ஏற்கனவே அவர்கள் உயிரிழந்து கிடந்தனர். காலை 6 மணி அளவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வித்யாரண்யபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சேத்தன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் வேலை செய்துவந்ததாகவும் நிதி நெருக்கடி காரணமாக அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கடித்தத்தில் சேதன் எழுதியதாவது, எனது மரணத்திற்காக எனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை காவல்துறை துன்புறுத்தக்கூடாது. இதற்கு நானே பொறுப்பு.