மகா கும்பமேளாவில் பெண்கள் குளிக்கும் வீடியோ விற்பனை விவகாரம்: மெட்டா உதவியை நாடிய உ.பி. போலீஸ்
- ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்று வருகின்றனர்.
- அகிலேஷ் யாதவ் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவானது வரும் 26-ந்தேதி மகா சிவராத்திரியை ஒட்டி நிறைவு பெறுகிறது. உ.பி. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்று வருகின்றனர்.
இதனிடையே மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படும் அதிரச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் கும்பல்கள், இந்த வீடியோக்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகா கும்பமேளாவில் பெண்களின் கௌரவத்தைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது. இது மிகவும் அநாகரீகமான மற்றும் உணர்ச்சிகரமான சர்ச்சைக்குரிய விஷயம் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விற்பனை செய்தததாக இரண்டு சமூக ஊடகங்கள் மீது உ.பி. காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும், வீடியோக்களை வெளியிட்டதாக கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்டாகிராமை கையாளும் நபர் குறித்து மெட்டாவிடம் தகவல் கோரியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.