கெஜ்ரிவாலின் ஷீஷ் மகாலை மியூசியமாக மாற்றுவோம் - ரேகா குப்தா
- ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
- ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், பாஜகவினர் 'ஷீஷ் மகால்' என்று அழைக்கும் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதலமைச்சர் இல்லத்தை 'மியூசியமாக' மாற்றுவோம் என்று டெல்லியின் புதிய முதல்வரான ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தற்கு அவருக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த கெஜ்ரிவாலின் ஆட்சியின் பொது முதலமைச்சர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.
பாஜகவின் ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.