செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி டெல்லியில் முகாமிட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள்
- தமிழகம் முழுவதும் உள்ள 72 மாவட்டத் தலைவர்களில் சிலர் இந்த கிராமக் கமிட்டி அமைக்கப்படுவதை ஏற்கவில்லை.
- காங்கிரஸ் தலைவர்கள் சுமார் 25 பேர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடாங்கரை சந்தித்து மனு அளித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி 17-ந் தேதி செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதன்படி, மாநில தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்து உள்ளது.
ஆனால், செல்வப்பெருந்தகையால் புதிய நிர்வாகிகள் நியமனமோ, மாவட்டத் தலைவர்கள் சீரமைப்போ சரியாக செய்ய முடியவில்லை. மூத்த தலைவர்களும் கே.எஸ்.அழகிரிக்கு ஒத்துழைப்பு அளித்தது போல் இவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநில கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கிராமக் கமிட்டிகளை நியமிக்கும் நடைவடிக்கையில் செல்வப்பெருந்தகை தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்ட கிராமக் கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்டந்தோறும் சென்று செல்வப்பெருந்தகை வழங்கி வருகிறார்.
ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள 72 மாவட்டத் தலைவர்களில் சிலர் இந்த கிராமக் கமிட்டி அமைக்கப்படுவதை ஏற்கவில்லை. அவர்கள் செல்வப்பெருந்தகை நடத்திய ஆலோசனை கூட்டங்களையும், காணொலிக் காட்சி கூட்டங்களையும் புறக்கணித்தனர்.
இதற்கிடையே வடசென்னை மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம் மற்றும் செங்கம் குமார், டீக்காராமன் உள்பட 32 மாவட்டத் தலைவர்கள் செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முகாமிட்டுள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சுமார் 25 பேர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கரை சந்தித்து மனு அளித்தனர். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடந்துள்ளது.
அவர்கள் அளித்த புகாரில், கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்களை செல்வப்பெருந்தகை மதிப்பதில்லை. கட்சியை தி.மு.க.வின் ஒரு அணி போல மாற்றி விட்டார். மூத்த தலைவர்கள் சிலரின் ஆதரவாளர்களை பதவியில் இருந்து தூக்கி உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
மாவட்டத் தலைவர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமைப்புப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து தங்கள் புகார்களை தெரிவிக்க உள்ளனர்.