சீனா குறித்து சாம் பிட்ரோடா கூறியது காங்கிரசின் கருத்துக்கள் அல்ல - ஜெய்ராம் ரமேஷ்
- சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என சாம் பிட்ரோடா தெரிவித்தார்
- சாம் பிட்ரோடாவின் இந்த கருத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்துவருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யமுடியாமல் இருக்கிறது.
அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்கின்றன. அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது.
இந்நிலையில், சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி ஒன்றில் சாம் பிட்ரோடாவிடம் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இணைந்து சீனாவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது
அதற்கு பதில் அளித்த அவர், "சீனாவிடம் இருந்து நமக்கு என்ன அச்சுறுத்தல் வருகிறது என்று எனக்கு புரியவில்லை. அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். நமது அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே மோதலாக உள்ளது. மேலும் இந்த அணுகுமுறை எதிரிகளை உருவாக்குகிறது. ஆனால் இது நாட்டிற்குள் ஆதரவைப் பெறுகிறது. இந்த மனநிலையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். முதல் நாளிலிருந்தே சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
சாம் பிட்ரோடாவின் இந்த கருத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்நிலையில், சீனா குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கள், இந்திய தேசிய காங்கிரசின் கருத்துக்கள் அல்ல என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.