இந்தியா (National)

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வாரா?- துணைநிலை ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார்

Published On 2024-09-17 01:31 GMT   |   Update On 2024-09-17 01:31 GMT
  • தன்னை மக்கள் நேர்மையாளன் என்று சொல்லும்வரை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டேன்- கெஜ்ரிவால்.
  • டெல்லி மந்திரிகள் அதிஷி, கோபால் ராய், சவுரவ் பரத்வாஜ், கைலாஷ் கெலாட் பெயர்கள் அடிபடுகிறது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் கடந்த 13-ந்தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். தன்னை மக்கள் நேர்மையாளன் என்று சொல்லும்வரை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டேன் என்று கூறினார். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தில் நேற்று அவரை முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா சந்தித்து பேசினார். புதிய முதல்-மந்திரியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் மாலையில், கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதிலும், புதிய முதல்-மந்திரி தேர்வு பற்றி விவாதிக்கப்பட்டது.

டெல்லி மந்திரிகள் அதிஷி, கோபால் ராய், சவுரவ் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், தனித்தொகுதிகளில் வெற்றி பெற்ற சில எம்.எல்.ஏ.க்கள், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா ஆகியோரின் பெயர்கள் புதிய முதல்-மந்திரி பதவிக்கு அடிபடுகின்றன.

இதற்கிடையே, டெல்லி கவர்னர் வி.கே. சக்சேனாவை இன்று சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டுள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு சந்திக்க அவருக்கு கவர்னர் நேரம் ஒதுக்கி தந்துள்ளார். இச்சந்திப்பின்போது, கவர்னரிடம் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது. அதைத்தொடர்ந்து புதிய முதல்-மந்திரி பதவியேற்பார் என்று தெரிகிறது.

Tags:    

Similar News