இந்தியா

ஆந்திர கவர்னருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய ஜெகன்மோகன் ரெட்டி

Published On 2024-06-04 20:10 IST   |   Update On 2024-06-04 20:10:00 IST
  • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
  • முதல் மந்திரி ஜெகன் ரெட்டி தனது ராஜினாமாவை கவர்னரிடம் அளித்துள்ளார்.

அமராவதி:

பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ம் தேதி முடிவடைந்ததால் கடந்த 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இந்த தேர்தலில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டது.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜனதா 10 இடங்களிலும் போட்டியிட்டது.வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தெலுங்கு தேசம்- பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் இருந்தது.

ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 158 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. கூட்டணி இல்லாமல் தனித்து 131 தொகுதிகளில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது.

ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்று வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூன் 9-ம் தேதி அமராவதியில் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆந்திர கவர்னர் அப்துல் நசீரிடம் ஜெகன்மோகன் ரெட்டி தனது ராஜினாமா கடிதத்தை இன்று அளித்துள்ளார்.

Tags:    

Similar News