புதுச்சேரி சட்டசபையில் ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்
- நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2025-2026 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
- ஏராளமான சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 15-வது சட்டசபையின் 6-வது பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் கைலாஷ்நாதன் உரை வாசித்தார். நேற்று 2-வது நாளாக சட்டசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு உறுப்பினர்கள் பேசி கருத்துகளை தெரிவித்தனர்.
இதற்கிடையே பெஞ்சல் புயல் நிவாரணம் முழுமையாக வழங்காததை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் தி.மு.க. காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதை தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியது. நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2025-2026 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றிருந்தது.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்காக கல்லூரியில் படிக்கும் போது மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பன உள்பட ஏராளமான சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.