பணிக்கு திரும்பாமல் நீண்ட நாள் விடுமுறை எடுத்துள்ள அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை- புதுச்சேரி தலைமை செயலர் உத்தரவு
- அவசரமாக விடுமுறை தேவை என்று எடுத்த அரசு ஊழியர்கள் விடுமுறை முடிந்த பிறகு பணிக்கு திரும்புவது கிடையாது.
- சிலர் வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்துவிட்டு அங்கேயே செட்டிலாகி விடுவது உண்டு.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் விடுமுறையில் சென்ற அரசு ஊழியர்கள் சிலர் பணிக்கு திரும்பாமல் நீண்ட நாட்களாக உள்ளனர். இதனால் பிற அரசு ஊழியர்களுக்கு பணிசுமை அதிகரித்துள்ளதோடு, அரசு துறை பணிகளிலும் தேக்க நிலை ஏற்படுகிறது.
அவசரமாக விடுமுறை தேவை என்று எடுத்த அரசு ஊழியர்கள் விடுமுறை முடிந்த பிறகு பணிக்கு திரும்புவது கிடையாது. அரசு துறைக்கும் தகவல் தெரிவிப்பது கிடையாது. சிலர் வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்துவிட்டு அங்கேயே செட்டிலாகி விடுவது உண்டு.
சிலர் இடமாற்றம் செய்யப்பட்ட புதிய துறைக்கு செல்லாமல் அரசியல்வாதிகளிடம் தஞ்சம் அடைவதும் உண்டு.
இது தொடர்பாக புதுச்சேரி தலைமை செயலர் சரத்சவுகானுக்கு புகார் சென்றதையடுத்து, ஒவ்வொரு அரசு துறையிலும் நீண்ட காலமாக பணிக்கு வராமல் டிமிக்கி கொடுத்து வரும் அரசு ஊழியர்களை கணக்கெடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதையடுத்து நிர்வாக சீர்திருத்த துறை, அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி பணிக்கு வராத அரசு ஊழியர் விவரங்களை உடனடியாக சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.
நீண்ட காலமாக பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என கூறப்படுகிறது. அந்த விளக்கம் திருப்தி இல்லாத பட்சத்தில், பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது. மேலும் அவர்களது பணிக்காலம் ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது.