புதுச்சேரி இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபரிடம் ரூ.16 லட்சத்தை இழந்த இளம்பெண்
- கேதார்நாத் சுற்றுலா பேக்கேஜ் தொடர்பாக ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்தார்.
- 2 புகார்கள் குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத வாலிபருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த வாலிபர் திடீரென கூரியர் மூலம் பரிசு பொருட்கள் அனுப்பியுள்ளதாக அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.
அதற்கு அடுத்த நாள் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மற்றொரு நபர் சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக கூறி, உங்களுடைய பெயருக்கு பரிசு பொருள் ஒன்று வந்துள்ளதாக வும், அதனை டெலிவரி செய்வதற்கு செயலாக்க கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதை நம்பிய அப்பெண் அந்த நபர் கூறியபடி ரூ. 16 லட்சத்து 21 ஆயிரத்து 607-ஐ அனுப்பினார்.
ஆனால் பரிசு பொருள் வந்து சேரவில்லை. பின்னர் விசாரித்த போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபர் பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அந்த பெண் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதுபோல் புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்த சுப்ரமணியன் என்பவர் கேதார்நாத் சுற்றுலா பேக்கேஜ் தொடர்பாக ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்தார். அதில் தெரிவிக்கப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு சுற்றுலா பேக்கேஜ் தொடர்பாக பேசினார்.
எதிர்முனையில் பேசிய நபர் விடுதி முன்பதிவுக்கு ரூ.10 ஆயிரம், விமான டிக்கெட் மற்றும் கார் முன்பதிவு செய்வதற்கு ரூ.42 ஆயிரம் அனுப்புமாறு கூறியுள்ளார்.
இதைநம்பிய ஆனந்த சுப்ரமணியன், அந்த மர்மநபருக்கு ரூ.67 ஆயிரம் அனுப்பினார். பின்னர் எந்த தகவலும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
2 புகார்கள் குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.