புதுச்சேரி சட்டசபையில் கடும் அமளி- தி.மு.க.- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
- காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழகத்தில் மொழி போராட்டம் நடந்தது.
- அமைச்சர் பேச்சுக்கு தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.
சபையின் முதல் அலுவலாக கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களை பேச சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அழைத்தார்.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்:- புதுவையில் எத்தனை மொழிகள் உள்ளது என தெரியுமா?
எதிர்க்கட்சித்தலைவர் சிவா:- இருமொழி கொள்கைதான் வேண்டும். தமிழை எதிர்க்கிறீர்களா?
அமைச்சர் நமச்சிவாயம்: தமிழகத்தில் மொழி போராட்டம் நடந்தது எப்போது தெரியுமா? காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழகத்தில் மொழி போராட்டம் நடந்தது. இந்தியை திணித்ததும் காங்கிரஸ்தான். அவர்களோடுதான் கூட்டணியில் உள்ளீர்கள்.
இதையடுத்து அமைச்சர் பேச்சுக்கு தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ஆதரவாக அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் பேசினர்.
இதனால் சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது. சபாநாயகர் தொடர்ந்து மணி அடித்து சபையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றார்.
ராமலிங்கம் (பா.ஜ.க.): 3-வது மொழி விருப்ப பாடமாக உள்ளது. விரும்பும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்கலாம்.
அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார்: கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொண்டால் அறிவு வளரும். தமிழகத்தில் தமிழ்நாடு என பெயர் வர யார் காரணம் என தெரியுமா?
ராமலிங்கம்: தமிழ்நாடு என பெயர் வர சுந்தரலிங்கனார் உயிர் நீத்தார், அதனால்தான் தமிழ்நாடு என பெயர் வந்தது.
எதிர்க்கட்சித்தலைவர் சிவா:- தமிழக முதலமைச்சராக அண்ணாதுரை பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக தமிழ்நாடு என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இது 4 ஆண்டு பா.ஜ.க.காரருக்கு தெரியாது.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்: புதுவையில் இருமொழி, மும்மொழி கொள்கை இல்லை, 4 மொழி கொள்கை உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 4 மொழி உள்ளது.
செந்தில்குமார்(தி.மு.க.): இது 22 மொழிகள் கொண்ட தேசம்.
அனிபால்கென்னடி (தி.மு.க.): எந்த மொழியையும் நாங்கள் எதிர்க்கவில்லை. மொழி திணிப்பைதான் எதிர்க்கிறோம்.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்: காங்கிரஸ் ஆட்சியில்தான் மொழி போர் நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம்: இந்திமொழிக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் எப்படி வந்தது? அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசு எது? உங்கள் கட்சி தலைமையிடம் கேட்டுவிட்டு பேசுங்கள். புதுவை அரசின் கொள்கை மும்மொழி கொள்கைதான். முதலமைச்சர், கவர்னர் ஏற்றதால்தான் மும்மொழி கொள்கை அமலுக்கு வந்துள்ளது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் புதுவையில் மும்மொழி கொள்கைதான் அமலில் உள்ளது.
எதிர்கட்சி தலைவர் சிவா: அமைச்சரின் அராஜக பேச்சை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் எனக்கூறினார். அவருடன் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினர்.