- இப்படியான தவறுதலான உச்சரிப்பால் அர்த்தம் திரிக்கப்பட்ட அறிவுரைகளை மக்கள் பின்பற்ற துவங்கினால் விளைவுகள் என்னவாகும்?.
- பேச்சு வழக்கு திரிபில் இடையில் மருவிய பழமொழி அதனின் நிஜ அர்த்தத்தையும் பொருளையும் மாற்றிவிட்டது என்பதே உண்மை.
நண்பனின் தங்கை கல்யாணம். ஒரே நிறுவனத்தில் நண்பனும் நானும் பணி புரிகின்றோம்.
நண்பன் ஒரு வகையில் உறவு முறையில் சொந்தமும் கூட என்பதால் முகூர்த்தம் நடைபெறும் இடத்தில் நிறைய நேரம் நண்பனோடு நின்று கொண்டிருக்க வேண்டியதாயிற்று.
முகூர்த்தம் முடிந்து தற்போதைய டிரெண்ட் படி சினிமா பாடலுக்கு மணப்பெண், மணமகன் குண்டக்க மண்டக்க குத்தாட்டம் போடுவது, டூயட் சீன் போல போட்டோ ஷூட், கேக் வெட்டுவது என களேபரங்கள் நடந்து கொண்டிருந்தது.
உடன் வந்த மற்றொரு நண்பன் என்னிடம் மெதுவாக சாப்பிட போகலாம் என்றான்.
சற்று பொறு.! அவனும் வரட்டும் சேர்ந்து போவோம் என்றேன்.. கடுப்போடு என்னை முறைத்தவாறே காத்திருந்தான் மற்ற நண்பன்.
ஒரு வழியாக அரை மணி நேரம் கழித்து சென்றோம். அவர்கள் ஊரில் "பெட்டிச்சோறு" என சாப்பாட்டு வழக்கம் உண்டாம்.
திருமணத்திற்கு வந்த உறவுக்காரர்கள் திருமணத்திற்கு வர இயலாத தங்கள் வீட்டு பெரியவர்கள், இளம் பெண்களுக்கு வீட்டிற்கு சாப்பாடு எடுத்து செல்லும் வழக்கத்திற்கு 'பெட்டிச்சோறு" என்ற பெயராம்.
சிக்கன் பிரியாணி + சிக்கன் பொரிப்பு என்பதால் அனைவரும் தாராளமாக எடுத்து சென்றதில் நாங்கள் சென்ற நேரத்தில் பிரியாணி கிட்டத்தட்ட காலியாகி விட்டது.
சிக்கன் பீஸ் இல்லாத வெறும் குஸ்கா மற்றும் தயிர்சாதம் பரிமாறபட்டது எங்களுக்கு.
நேரத்தில் சாப்பிட அழைத்த நண்பன் என்னிடம் சற்று முறைப்போடு சொன்னான்.
அப்போதே கூப்பிட்டேன். .வா சாப்பிட போகலாம் என்று. கேட்டயா!..நல்லா தயிர் சாதத்தை தின்னு இப்போ..
"பந்திக்கு முந்து படைக்கு பிந்து" என்று சும்மாவா பெரியவங்க சொன்னாங்க என்றான்.
என்னை மாதிரியே இந்த பழமொழியை பெரும்பாலும் கல்யாண வீட்டு முகூர்த்தம் முடிந்து சாப்பாட்டு பந்தி ஆரம்பிக்கும் தருவாயில் யாரேனும் சொல்ல கேள்வி பட்ட அனுபவம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்.
இந்த பழமொழியில் கூறப்பட்டுள்ள கருத்து ஒருவனை சாப்பாட்டு ராமனாகவும், தொடை நடுங்கியாகவும் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துவதாக தெரிகிறதே.
கணவன் போரில் இறந்ததும் பாலகனான தன் மகன் கையில் வேலை கொடுத்து போருக்கு அனுப்பினாள் சங்க காலத்தில் தமிழ் தாய் ஒருத்தி.
அந்த தாயின் மகன் போரில் முதுகில் விழுப்புண் பட்டு மாண்டதாக ஊரார் சொன்னதை கேள்வி பட்டு போர்க்களம் நோக்கி கோபாவேசத்தோடு புறப்படுகிறாள்.
என் மகன் முதுகில் காயம் பட்டு இறந்திருந்தால் போரில் புறமுதுகு காட்டி ஓடிய கோழைக்கு பால் கொடுத்ததற்காக அவனுக்கு பாலூட்டிய மார்பை போர்க்களத்தில் அறுத்து எறிவேன் என சூளுரைத்து போர்க்களம் நோக்கி செல்கிறாள்.
போர்க்களம் சென்று தன் மகன் மார்பில் விழுப்புண் பட்டு மாண்டதை பார்த்ததும் மகன் இறந்ததை நினைத்து துயர் கொள்ளாமல் மகன் மார்பில் விழுப்புண் பட்டு மாண்டதை நினைத்து சந்தோசம் கொண்ட வீர தமிழ் பெண்கள் வாழ்ந்த தமிழ் சமூகம் இது.
மறம் செறிந்த வீரத்தையும், அறம் செறிந்த மானத்தையும் இரு கண்களாக கொண்டு போருக்கு புயலென புறப்படும் தமிழ் சமூகமா பந்திக்கு முந்து படைக்கு பிந்து என சொல்லி வைக்கும்.
நிச்சயம் அப்படி சொல்லி இருக்காது. இந்த பழமொழியும் தவறுதலான உச்சரிப்பால் அர்த்தம் திரிக்கப்பட்டு இருக்கும் என உள்ளுணர்வு சொல்லியது.
இப்படியான தவறுதலான உச்சரிப்பால் அர்த்தம் திரிக்கப்பட்ட அறிவுரைகளை மக்கள் பின்பற்ற துவங்கினால் விளைவுகள் என்னவாகும்?.
நாட்டுப்பற்று பின் தள்ளப்பட்டு சோற்றுப்பற்று முன் வந்து விடும்.
அறிவுரையை சொல்லி தருவதே பழமொழியின் நிஜமான நோக்கமாக இருக்கும்.
அதை விட்டு சோத்துக்கு முந்து!! போருக்கு பிந்து என்பதாக இந்த பழமொழியின் அர்த்தம் அமைவதால் பழமொழியின் கருத்து தள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
"பந்தி" அதாவது நமது வீட்டு விசேஷங்களில் உறவினர்கள் வருகை தந்து பின் உணவு பரிமாறபடும் போது விருந்துகளில் கலந்து கொள்ள எத்தனை உறவினர்கள் வருவார்கள் என்பதை நம்மால் கணிக்க முடியாது.
வருகை தெரியும் உறவினர்களின் எண்ணிக்கை தெரியாது என்பதால், குறைவாக சமைத்தால் உணவானது விரைவில் தீர்ந்துவிடும்.
அதனாலேயே பந்திக்கு முந்திவிட வேண்டும் என்றும் படை போன்ற போர் நிகழ்வுகளில் பிந்தி கொள்ள வேண்டும் என கூறியுள்ளதாக நம்மில் அனேகர் பலர் இந்த பழமொழியை இப்படித்தான் புரிந்து வைத்திருப்போம்.
உண்மையில் "பந்திக்கு முந்து, படைக்கு பிந்து" என்ற பழமொழிக்கு பொருள் இது தானா?
வம்பு சண்டைக்கு போகாதே!! வந்த சண்டையை விடாதே! என சொல்லி வளர்க்கும் நமது முந்தைய தலைமுறை இப்படியா கோழையை போல் சோத்தாமுட்டி போல் நம்மை நடந்து கொள்ளும் படி சொல்லி இருப்பார்கள் என்ற சந்தேகத்தில் பழமொழி குறித்து ஆராய்ந்த போது "பந்திக்கு முந்து, படைக்கு பிந்து" பழமொழிக்காக கிடைக்க பெற்ற நிஜ விளக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
"பந்திக்கு முன் தீ", "படைக்கு பின் தீ" என்பது தான் நாளடைவில் 'பந்திக்கு முந்து, படைக்கு பிந்து' என மருவியுள்ளது.
அதாவது பந்தி போன்ற விருந்து நிகழ்வுகளில் எதிர்பார்த்ததை விட மக்கள் அதிகமாக வரக்கூடும்.
அதனால் பந்திக்கு முன்னரே சமையல் செய்ய தீ மூட்ட வேண்டும். அதையே 'பந்திக்கு முன் தீ' என்கிறோம்.
போர்காலங்களில் போருக்கு சென்ற வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்து இருப்பார்கள். உண்ணும் உணவை வீணாக்க கூடாது.
எம்புள்ளைக்கு, என் கணவனுக்கு ஆக்கி வைச்ச சோத்தை சாப்பிட கூட அவர் வராம போயிட்டாரே! என பெண்கள் உணர்வு மிகுதியால் நினைத்து ஏங்கி அழுவார்கள்.
இதனை தவிர்க்க போர் முடிந்த பின் சரியாக விசாரித்து எத்தனை பேர் உயிரோடு உள்ளார்களோ அவர்களுக்கு மட்டும் சமைக்க வேண்டும். இதனையே 'படைக்கு பின் தீ' என்றார்கள்.
கண்டிப்பாக நமது முன்னோர்கள் படைக்கு பிந்து என வீரத்தில் குறைந்தவர்களாக கோழைகளாக இருக்கும் படி நம்மை வழி நடத்தமாட்டார்கள்.
பேச்சு வழக்கு திரிபில் இடையில் மருவிய பழமொழி அதனின் நிஜ அர்த்தத்தையும் பொருளையும் மாற்றிவிட்டது என்பதே உண்மை.
தொடர்புக்கு-isuresh669@gmail.com