செய்திகள்

கோபா அமெரிக்க கால்பந்து: உருகுவேயை வீழ்த்தி மெக்சிகோ அபார வெற்றி

Published On 2016-06-06 13:17 IST   |   Update On 2016-06-06 13:17:00 IST
கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் மெக்சிகோ-உருகுவே அணிகள் மோதின. இதில் மெக்சிகோ 3-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த உருகுவேயை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
லாஸ்ஏஞ்சல்ஸ்:

உலக கோப்பை, ஐரோப்பிய கோப்பை ஆகியவற்றுக்கு அடுத்த பிரபலமான கால்பந்து ஆட்டம் கோபா அமெரிக்கா போட்டியாகும்.

தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கும் 45-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதன் தொடக்க ஆட்டத்தில் கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை (‘ஏ’ பிரிவு) வீழ்த்தியது.

அதை தொடர்ந்து நடைபெற்ற கோஸ்டாரிக்கா -பராகுவே (‘ஏ’ பிரிவு), பிரேசில்-ஈக்வடார் (‘பி’ பிரிவு) ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. பெரு அணி 1-0 என்ற கணக்கில் ஹைதியை வீழ்த்தி (‘பி’பிரிவு) இருந்தது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஒரு ஆட்டத்தில் வெனிசூலா- ஜமைக்கா (‘சி’ பிரிவு) அணிகள் மோதின. இதில் வெனிசூலா 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. 15-வது நிமிடத்தில் வெனிசூலா அணிக்காக மார்ட்டினஸ் இந்த கோலை அடித்தார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ-உருகுவே அணிகள் மோதின. இதில் மெக்சிகோ 3-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த உருகுவேயை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. மெக்சிகோ அணியில் ரபெல் மார்கஸ் (85-வது நிமிடம்) ஹீரரா (92-வது நிமிடம்) ஆகியோரும், உருகுவே அணியில் காடினும் (74-வது நிமிடம்) கோல் அடித்தனர். ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் உருகுவே வீரர் அல்வாரா பெரைரா சுயகோல் (சேம்சைடு) அடித்தார்.

நாளை நடைபெறும் ஆட்டங்களில் ‘டி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- சிலி, பொலிவியா-பனாமா அணிகள் மோதுகின்றன.

Similar News