செய்திகள்

கோவா கால்பந்து அணிக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை, தடையை ரத்து செய்த ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி

Published On 2016-07-23 07:39 IST   |   Update On 2016-07-23 07:39:00 IST
ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி கோவா கால்பந்து அணிக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரூ.6 கோடியாக நேற்று குறைத்தது.
கடந்த ஆண்டு நடந்த 2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் (ஐ.எஸ்.எல்.) சென்னையின் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றது. ஆட்டம் முடிவில் இரு அணி வீரர்கள் மற்றும் சில நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கோவா அணியினர் பரிசளிப்பு விழாவை புறக்கணித்தனர்.

பரபரப்பான இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்திய ஐ.எஸ்.எல். ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, போட்டிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக எப்.சி.கோவா அணிக்கு ரூ.11 கோடி அபராதம் விதித்தது. அத்துடன் கோவா அணியின் இணை உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் டெம்போ, தத்தாராஜ் சால்கோகர் ஆகியோருக்கு முறையே 2 மற்றும் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

மேலும் 3-வது சீசனில் கோவா அணியின் 15 புள்ளிகள் பறிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து கோவா அணி நிர்வாகம் தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியிடம் அப்பீல் செய்யப்பட்டது. நடந்த சம்பவத்துக்காக வருத்தமும் தெரிவித்தனர்.

இதனை பரிசீலனை செய்த ஒழுங்கு நடவடிக்கை குழு கோவா அணிக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரூ.6 கோடியாக நேற்று குறைத்தது. கோவா அணி நிர்வாகிகளுக்கு விதிக்கப்பட்ட தடையும், அடுத்த சீசனில் அந்த அணியின் 15 புள்ளிகள் பறிக்கும் முடிவும் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News