செய்திகள்

இங்கிலாந்து வீரர்களையும் விட்டு வைக்காத ரூபாய் நோட்டு பிரச்சனை: அலவன்ஸ் வழங்குவதில் சிக்கல்

Published On 2016-11-21 16:30 IST   |   Update On 2016-11-21 16:30:00 IST
ரூபாய் நோட்டு பிரச்சனையால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா வந்து 18 நாட்கள் ஆகியும் இங்கிலாந்து வீரர்களுக்கு தினசரி அலவன்ஸ் வழங்கப்படவில்லை.
புதுடெல்லி:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணி கிட்டத்தட்ட இந்தியா வந்து 18 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தினவரி அலவன்ஸ் வழங்கவில்லை.

ரூபாய் நோட்டு பிரச்சனையால் தான் இங்கிலாந்து வீரர்களுக்கு அலவன்ஸ் உரிய நேரத்தில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இங்கிலாந்து அணியில் ஒருவர் கூறுகையில், ”இதனால் இங்கிலாந்து வீரர்கள் தங்களது கிரிடிட் கார்டுகள் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்திய ரூபாய் நோட்டுகள் அவர்களிடம் குறைந்த அளவிலேயே உள்ளது. அதுவும் அவர்களது மேனேஜர் மூலம் வழங்கப்பட்டது” என்றார்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி மோடி அறிவித்தது முதல் நாட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்களையும் இந்த அறிவிப்பு நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக பாதித்துள்ளது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் குறைந்த அளவில் செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.

முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டிக்கு ரூ.58.6 லட்சம் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இதில் தினசரி படி குறித்து சுப்ரீம் கோர்ட்டு எதுவும் குறிப்பிடவில்லை. இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து வீரர்களுக்கு தினசரி படி வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டிடம் இது தொடர்பாக முறையிட்டு தினசரி அலவன்ஸ் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Similar News