செய்திகள்

ஐ.பி.எல்.-ஐ தவிர்த்து ஸ்டோக்ஸ், பட்லர் பீர் குடிக்க செல்கிறார்கள்: பீட்டர்சன்

Published On 2017-05-15 19:24 IST   |   Update On 2017-05-15 19:24:00 IST
ஐ.பி.எல். பிளேஆஃப் சுற்றில் விளையாடாமல் ஸ்பெயின் நாட்டில் டிரைனிங் சீசனுக்கு செல்வது பீர் குடிக்கவே என்று பீட்டர்சன் சாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் உலகளவில் மிகப்பெரிய தொடராக கருதப்படுகிறது. பணம் அதிக அளவில் கொட்டிக்கிடப்பதால் வெளிநாட்டு வீரர்கள் அதிக அளவில் இந்த தொடரில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காகவும், பட்லர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள்.

லீக் ஆட்டங்கள் முடிவில் புனே மற்றும் மும்பை அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாளை குவாலிபையர் 1-ல் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இந்நிலையில் இருவரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து செல்வது புனே அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணி ஜூன் 1-ந்தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னோட்டமாக தென்ஆப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகளில் மே 24, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இந்த தொடருக்கு முன்னோட்டமாக இங்கிலாந்து அணி ஸ்பெயின் சென்று பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட இருக்கிறது. இதன்காரணமாக இருவரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது.

முக்கியமான கட்டத்தில் இருவரையும் திரும்ப அழைத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு, முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘இது முற்றிலும் பரிதாபத்திற்குரியது. ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்குப் பதிலாக, இருவரும் பீர் குடிக்க ஸ்பெயின் செல்ல வேண்டியிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் ஒரு சதம் உள்பட 300 ரன்கள் எடுத்ததுடன், 10-க்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

Similar News