9 விக்கெட்...157 ரன்கள்...முதல் டெஸ்டில் வெற்றியை ருசிக்குமா இந்தியா?
நாட்டிங்காம்:
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட் டிங்காமில் உள்ள டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 278 ரன் குவித்தது.
95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன் எடுத்திருந்தது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 303 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 209 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கேப்டன் ஜோரூட் சதம் அடித்தார். அவர் 109 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டும், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டும், முகமது ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
209 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன் எடுத்து இருந்தது. ராகுல் 26 ரன்னில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா, புஜாரா தலா 12 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 157 ரன் தேவை. கைவசம் 9 விக்கெட் உள்ளது.
இதனால் இந்த டெஸ்டில் இந்தியா வெற்றிபெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான கட்டத்தில் இருக்கும் இந்த டெஸ்டில் இந்தியாவுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு இருக்கிறது.