செய்திகள்
ஷாருக் கான் அதிரடியால் நெல்லை அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கோவை கிங்ஸ்
லைகா கோவை கிங்ஸ் அணி 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஷாருக் கான் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் ஸ்ரீதர் ராஜூ (19 பந்தில் 30 ரன்), சுரேஷ் குமார் 35 பந்தில் 36 ரன்) சிறப்பாக விளையாடினர். ஆனால் அதன்பின் வந்த சாய் சுதர்சன் (0), அதீக் உர் ரஹ்மான் (3), முகிலேஷ் (6) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த கேப்டன் ஷாருக் கான் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இவரின் அதிரடியால் 16-வது ஓவரில் 18 ரன்களும், 17-வது ஓவரில் 10 ரன்களும், 18-வது ஓவரில் 6 ரன்களும், 19-வது ஓவரில் 16 ரன்களும் சேர்த்தது லைகா கோவை கிங்ஸ். இதனால் ஸ்கோர் 150 ரன்னைத் தாண்டியது.
கடைசி ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி ஷாருக் கான் 25 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் அடிக்க லைகா கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. ஷாருக் கான் 29 பந்தில் தலா ஐந்து பவுண்டரி, சிக்சர்களுடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.