விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்- பி.வி.சிந்து Return

Published On 2025-03-11 11:21 IST   |   Update On 2025-03-11 11:21:00 IST
  • தசைப்பிடிப்பு காரணமாக கடந்த மாதம் நடந்த ஆசிய கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப்பில் இருந்து சிந்து விலகி இருந்தார்.
  • சிந்து தனது முதல் மோதலில் தென்கொரியாவின் கா என் கிம்மை சந்திக்கிறார்.

பர்மிங்காம்:

பழம்பெருமை வாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி தொடரில் இந்திய வீரர்கள் பிரகாஷ் படுகோனே 1980-ம் ஆண்டும், கோபிசந்த் 2001-ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்றனர். அதன் பிறகு இந்தியர்கள் யாரும் பட்டம் வென்றதில்லை.

மொத்தம் ரூ.12.65 கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து களம் இறங்குகிறார். தசைப்பிடிப்பு காரணமாக கடந்த மாதம் நடந்த ஆசிய கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகிய சிந்து தனது முதல் மோதலில் தென்கொரியாவின் கா என் கிம்மை சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத், சிங்கப்பூரின் ஜியா மின் யோவுடன் மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வாடனாபியை சந்திக்கிறார். இன்னொரு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பிரான்சின் தோமா ஜூனியர் போபோவுடன் தனது மோதலை ஆரம்பிக்கிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-திரிஷா ஜாலி, அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ இணையும், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்-ருத்விகா ஷிவானி, துருவ் கபிலா-தனிஷா, சதீஷ் கருணாகரன்-ஆத்யா வரியாத் ஜோடியும் கலந்து கொள்கின்றன.

Tags:    

Similar News