சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணியின் சாதனை துளிகள்
- துபாய் மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 11 ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியடையவில்லை.
- ஐசிசி ஒருநாள் தொடர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ஓவர்களை வீசிய போட்டியாகவும் இது அமைந்துள்ளது.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
அதன்படி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சில சாதனைகளையும் படைத்துள்ளது. ஒரு மைதானத்தில் தோல்வியடையாமல் அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் இந்திய அணி கூட்டாக முதலிடத்தை எட்டியுள்ளது.
அதன்படி துபாய் மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 11 ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியைத் தழுவாமல், 10 முறை வெற்றி பெற்று, ஒரு முடிவில்லை என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன் நியூசிலாந்து அணி டுனெடினில் விளையாடிய 10 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவாமல் வெற்றியைப் பதிவுசெய்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது இந்திய அணி அதனை சமன்செய்துள்ளது.
ஒரு மைதானத்தில் தோற்காமல் அதிக வெற்றிகள் பெற்ற விவரங்கள்:-
10 - இந்தியா, துபாய் (11 போட்டிகள், 1 முடிவில்லை)
10 - நியூசிலாந்து, டுனெடின்
7 - இந்தியா, இந்தூர்
7 - பாகிஸ்தான், ஹைதராபாத் (பாகிஸ்தான்)
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இந்த இறுதிப் போட்டியில் மொத்தம் 99 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், அதில் 73 ஓவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களால் மட்டுமே வீசப்பட்டன. இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தொடர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ஓவர்களை வீசிய போட்டியாகவும் இது அமைந்துள்ளது.
முன்னதாக நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் 65.1 ஓவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசியது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை பட்டத்தை வென்ற அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றுள்ளது. இதில் 2002-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.