ஐ.பி.எல்.

2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஹாரி ப்ரூக் - 2 ஆண்டுகள் தடை?

Published On 2025-03-10 13:19 IST   |   Update On 2025-03-10 13:19:00 IST
  • இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
  • என் நாட்டிற்காக விளையாடுவதுதான் எனக்கு மிக முக்கியம் என்று ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது என்ற மிகக் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான நேரம். ஆகவே வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராக விரும்புகிறேன். இதற்கு எனக்கு நேரம் தேவைபடுகிறது. என் நாட்டிற்காக விளையாடுவதுதான் எனக்கு மிக முக்கியம்" என்று பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி விலை கொடுத்து வாங்கியது.

ஹாரி புரூக்கின் இந்த முடிவால் அடுத்த 2 ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் புதிய விதிப்படி, ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு வீரர் காயத்தை தவிர பிற காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினால் அடுத்த 2 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று தெரிவிதிக்கபட்டுள்ளது.

ஆகவே தனது பாட்டியின் மரணத்தை தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் இருந்து ஏற்கனவே விலகிய ஹாரி புரூக்கிற்கு 2027 ஐபிஎல் தொடர் வரை விளையாட தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News