போராடி வெல்வோம்.. சூளுரைத்த கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ரகானே
- கொல்கத்தா அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.
- தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் டெல்லி, கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அணிகள் தங்களின் கேப்டன்களை அறிவித்து விட்டனர். அந்த வகையில் கொல்கத்தா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன்களை அந்த அணியின் நிர்வாகம் இன்று அறிவித்தது. கேப்டனாக ரகானேவை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா அணியை வழிநடத்துவதை நினைத்தால் பெருமையாகவும், ஆர்வமாகவும் உள்ளதாக கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை வழிநடத்துவதை நினைத்தால் பெருமையாகவும், ஆர்வமாகவும் உள்ளது. வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். போராடி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு ரகானே கூறினார்.