மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூருவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி
- முதலில் ஆடிய பெங்களூரு 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது.
- அடுத்து பேட் செய்த டெல்லி அணி 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய எல்லீஸ் பெர்ரி அரை சதம் அடித்து 60 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ராக்வி பிஸ்ட் 33 ரன் எடுத்தார்.
டெல்லி சார்பில் ஷிகா பாண்டே, நல்லபுரெட்டி ஷாரனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய ஜெஸ் ஜான்சேன், ஷபாலி வர்மாவுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் அரை சதம் அடித்தனர்.
இறுதியில், டெல்லி அணி 15.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.